நெல்லையில் தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவியை, கணவர் அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சிறுக்கன் குறிச்சி கிராமத்தில் கூலி தொழிலாளியான வெள்ளப் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த நந்தினி என்பவரை கடந்த 11/2மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே கணவன், மனைவி இருவருக்கும் வரதட்சணை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமுற்ற மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து கணவர் பலமுறை மனைவியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்ததில் அவர் வர மறுத்து விட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவரும், அவருடைய தந்தையும் மாமியார் வீட்டிற்கு சென்று நந்தினியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்கள். ஆனால் அவர் வெள்ளைப்பாண்டியுடன் செல்ல மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் நந்தினியை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த மாமியாரையும் சரமாரியாக தாக்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வெள்ளபாண்டி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.