பழங்குடியின மக்கள் சீர்வரிசை பொருட்களை படைத்து பாரம்பரிய நடனம் ஆடி சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறவர் இன மக்கள் மற்றும் வன வேங்கைகள் கட்சியினர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீர்வரிசை பொருட்களை படைத்து சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். முன்னதாக பேருந்து நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், தேன், தினைமாவு, காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவற்றை மூங்கில் கூடைகளில் வைத்து பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். மேலும் சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போல உடையணிந்து மேளதாளத்துடன் ஊர்வலத்தின் முன்பு ஆடிக்கொண்டே கோவிலுக்கு வந்தனர்.
இதுகுறித்து வன வேங்கைகள் கட்சி மாநில தலைவர் இரணியன் கூறியதாவது, குறவர் மகள் வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால் மலைப்பகுதியில் விளையும் பொருட்களை தாய் வீட்டு சீதனமாக கொண்டு வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் இதே போல் வழிபாடு நடத்த உள்ளோம். மேலும் பூர்வீக தமிழ் குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.