நூல் மற்றும் பருத்தி விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நூல் மற்றும் பருத்தியின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் நூல் மற்றும் பருத்தியின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இருப்பினும் ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. எனவே ஆடை மற்றும் பின்னலாடை, விசைத்தறி உற்பத்தியாளர்கள் 21.01.2022 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த நிலைமை நீடித்தால் வீட்டு உபயோக ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி தொழிலகங்கள் இயங்குவது சாத்தியமில்லாமல் போகலாம். எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.