கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி தனது நண்பரான செந்தில்குமார் என்பவருடன் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டுள்ளார். இவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீரனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நிலைதடுமாறி விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உடல் நசுங்கி கோபியும், செந்தில்குமாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.