கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் தொழிலதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி பாளையம் பகுதியில் தொழிலதிபரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை விஷயமாக தனது காரில் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் காருக்குள் சிக்கிய பாஸ்கரை உடனடியாக மீட்டனர். இந்த விபத்தில் பாஸ்கர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். அந்த சமயம் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.