மொபட் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் டீ குடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ஏறினர். அப்போது பவானி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் மொபட்டின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் இருந்த 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு கார் ஒரு மின்கம்பத்தின் மீது மோதி நின்றது.
இந்த கார் மோதியதில் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த கார் ஓட்டுனர் அர்த்தநாரீஸ்வரர் (60) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.