கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு பெண் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து நேற்று காலை அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அத்திப்பட்டு கலைவாணர் நகர் சந்திப்பு சாலை வளைவில் வேகமாக திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. மேலும் பேருந்து அங்கிருந்த டீ கடைக்குள் புகுந்து, அதன் பின்புறம் இருக்கும் வீட்டின் சுவரை இடித்து தள்ளிவிட்டு நின்றது.
இந்த விபத்தில் டீக்கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வி, பேருந்து ஓட்டுநர் கணபதி, பேருந்தில் பயணம் செய்த 16 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.