கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தை நோக்கி தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவருடன் பெருமாள் என்பவர் உதவியாளராக சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தீத்தாகவுண்டனூர் சாலை வளைவில் லாரி திரும்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில்குமார் மற்றும் பெருமாள் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து லாரியின் டீசல் டேங்க் உடைந்து அதிலிருந்து டீசல் வெளியேறியுள்ளது. அதன் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் டீசலை கேன்களில் பிடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.