கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தனுஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்று டிரைவராக இளையராஜா என்பவர் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த தனுஷ் மற்றும் இளையராஜா ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியுள்ளது. மேலும் பொதுமக்கள் சிதறி கிடக்கும் பீர் பாட்டில்களை அள்ளி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.