கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் கார் ஓட்டுநரான தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ரூபினி(58), சரஸ்வதி(50) ஆகியோருடன் காரில் விழுப்புரம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிதம்பரம்- விருதாச்சலம் சாலையில் அம்மன் குப்பம் தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கூரை வீட்டிற்குள் புகுந்தது.
இதனால் வீட்டில் உரிமையாளர் கலைச்செல்வன் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இந்த விபத்தில் காயமடைந்த காரில் வந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.