தமிழகத்தில் ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏழைப் பெண்களுடைய திருமணத்திற்கு உதவி செய்யும் வகையில் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. அதற்கு கீழ் கல்வி தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன் பெற திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னதாக மணப்பெண்ணின் பெற்றோர் இருப்பிட சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகு அதை பதிவு செய்து சான்றிதழுடன் விண்ணப்பித்தால் பயன் பெற முடியும். இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவி பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் நிதியுதவி, தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்பவர்கள் குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இருக்க கூடாது.
வேறு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றிருக்கக்கூடாது. நான்கு சக்கர வாகனம், மாடி வீடு ஆகியவை இருக்கக் கூடாது. வருடத்திற்கு ஆண்டு வருமானம்.ரூ 75,000 க்குள் இருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணங்களுக்கு நிதியுதவி கோரி விண்ணப்பித்தால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் நிரம்பி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நலிந்த நிலையில் உள்ளவர்களை சென்றடையும் வகையில் இத்திட்டம் திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .