நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக சொன்னாலும், தலைநகர் காபூல் அருகிலுள்ள பாஞ்ச்ஷிர் மாகாணம் இன்னும் சுதந்திரமாகவே உள்ளது. தலிபானை எப்போதும் எதிர்க்கும் இங்கு தற்போது வடக்கு கூட்டணியின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இவர்கள் போருக்கு தயார் என்பதை அறிவிக்கிறது. வடக்கு கூட்டணியின் முன்னாள் தலைவரின் மகன் அகமது மசூத் இதற்கு தலைமை ஏற்றுள்ளார். ஆப்கான் துணை அதிபர் இங்கு தான் தற்போது மறைந்துள்ளார்.