விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீளப்பூடி விநாயகர் கோவில் தெருவில் விவசாயியான பெரியசாமி(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது சாதி கொண்டாரெட்டி என்றும், தனக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியசாமி சங்க நிர்வாகிகளுடன் இணைந்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பெரியசாமி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பெரியசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமியின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.