கடலூர் தாழங்குடா கடற்கரையில் மீன்வளத் துறை சார்பாக கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்ட கடலில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றத்தினால் அடிக்கடி மண்ணரிப்பு ஏற்படுகிறது. தண்ணீர் ஊருக்குள் வருகிறது. மேலும் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக கடற்கரையோரம் கருங்கல்லை கொட்டி மண்ணரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்பின் கடலூர் தாழங்குடாவிலிருந்து தேவனாம் பட்டினம் வரை கடற்கரை ஓரம் கருங்கல் கொட்டப்பட்டது. இதையடுத்து முதலாவதாக தென்பெண்ணையாறு முகத்துவாரத்திலிருந்து தாழங்குடா கிராமம் வரை கடற்கரை ஓரம் கருங்கல் கொட்டினர். அதற்குப் பிறகு இந்த திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டது. இச்சூழ்நிலையில் மீண்டும் மீன் வளத்துறை சார்பாக தாழங்குடா கடற்கரையில் மண்ணரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதில் ஏழு இடங்களில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்ட கடற்கரையில் இருந்து கடலுக்குள் 20 மீட்டர், 50 மீட்டர், 100 மீட்டர் வரைக்கும் கருங்கல் கொட்டப்பட்டு தடுப்புச் சுவர் கட்ட திட்டம் வகுத்துள்ளனர். இதுபோக மீன் உலர் தளம், மீன் இறங்கு தளம், மீன் விற்பனை கூடம் மற்றும் சாலை வசதிகளை அமைக்க ரூபாய் 13 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி விறுவிறுப்பாக தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் முடியும் நிலையில் மண்ணரிப்பு முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். ஆகவே எந்த வித தடையுமில்லாமல் மீனவர்களும் படகில் கடலுக்குள் சென்று மீன்களை பிடித்து கொண்டு வர முடியும் என்று மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.