Categories
மாநில செய்திகள்

“தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு வீடு கிடையாது” தமிழகத்தில் மீண்டும் ஒரு தீண்டாமை கொடுமை….. வெளியான பகீர் வீடியோ….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் மிகப் பெரிய காய்கறி சந்தை மற்றும் மாட்டுச்சந்தை அமைந்துள்ளது. இங்குள்ள காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தினம் தோறும் வந்து தங்களுடைய காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். அதேபோன்று வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகளும் வந்து தங்கி இருந்து வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஆனால் தற்போது வெளி மாநிலம் மற்றும் வெளியூரிலிருந்து யாராவது ஒட்டன்சத்திரம் பகுதியில் வாடகைக்கு வீடு கேட்டால் வழங்குவதில்லை என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வாடகைக்கு வீடு கேட்டு வருபவர்கள் அவர்களுடைய ஜாதி மற்றும் மதத்தை கூற வேண்டும். அப்படி கூறினால் தான் வீடு என்ற நிலை இருப்பதாக கூறப்படுகிறது.  இதை நிரூபிக்கும் விதமாக ஒரு பெண்மணி வாடகைக்கு வீடு கேட்டு வரும் நபரிடம் பேசும் வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த நபர் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண்மணி நீங்கள் என்ன ஜாதி என்று கூறுங்கள் என்கிறார். அந்த நபர் தன்னுடைய ஜாதி குறித்த விவரத்தை கூறவே தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு என்னுடைய சாமி ஒத்து வராது. எனவே வீடு தர முடியாது என்று கூறுகிறார். அதற்கு அந்த நபர் நான் ஆதிதிராவிட கிறிஸ்தவர்.

என்னுடைய மனைவி மலையாளி. என்னுடைய மகன் எந்த ஜாதி என்று எப்படி கூறுவது என்கிறார். அதற்கு அந்த பெண்மணி மீண்டும் எனது சாமிக்கு தாழ்த்தப்பட்டவர்கள் குடி வந்தால் ஒத்து வராது என்கிறார். அதோடு தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு வீடு வழங்குவது கிடையாது எனவும் கூறுகிறார். இந்த வீடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜாதி பாகுபாடு இருக்கக் கூடாது என்று கூறியும் அந்த பாகுபாடு நிலவுவது மிகப்பெரிய வேதனையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் தென்காசியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு கடையில் தின்பண்டம் வழங்க முடியாது என்று கூறிய விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |