தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை தூக்கிவாரிப் போட்டுள்ளது.
கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 73 ரூபாயும், சவரனுக்கு 584 ரூபாயும் உயர்ந்து எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 உயர்ந்து ரூ 32,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 73 உயர்ந்து ரூ 4,051-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ 90 காசு உயர்ந்து ரூபாய் 52.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கம் விலை உயர்வுக்கு தங்க வியாபாரிகள் சங்கம் கூறும் போது , சீனாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பெரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் உலகளவில் பாதித்துள்ளது. இதனால் பொருளாதார பங்குசந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் தங்கத்தில்முதலீடு செய்து வருகிறார்கள். அதனால் உலகளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருப்பதால் அங்கும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு சரிவில் இருந்து வருகின்றது. இப்படி பல காரணங்களில் தங்கம் விலை உயர்ந்து வருகின்றது.
மேலும் இந்த விலையேற்றம் ஒவ்வொரு வாரமும் புதிய உச்சத்தை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கும் என்று கூறியுள்ள தங்க முதலீட்டாளர்கள் , இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தங்கம் விலையேற்றம் இப்படித்தான் இருக்கும் இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று தங்க வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.