ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பெரிய போராட்டத்திற்கு பிறகு 100 நோயாளிகள் உயிர் பெற்ற சம்பவம் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லி சரோஜ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. விரைவில் ஆர்டர் செய்த ஆக்சிஜன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்கள் இருந்ததை தொடர்ந்து நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக ஆனதால் மருத்துவர்கள் அச்சமடைந்தனர். நோயாளிகளின் குடும்பமும் ஆக்சிஜன் கிடைக்க அரசு உதவிக்கும், ஆக்சிஜன் நிறுவனத்துக்கும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். இதனை தொடர்ந்து ஆக்சிஜனின் அளவு குறைந்ததால் கொரோனா நோயாளிகள் மூச்சு விட முடியாமல் திணறினர்.
இந்நிலையில் ஆர்டர் செய்த ஆக்சிஜன் டேங்கர் லாரி வந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனை வாயில் சிறியதாக இருந்ததால் உள்ளே நுழைய லாரி உள்ளே நுழைய முடியவில்லை. இது குடும்பத்தினரிடம் மேலும் அச்சத்தை கிளப்பியது. பின்னர் ஜேசிபி உதவியால் மருத்துவமனை சுவர் இடிக்கப்பட்டு லாரி உள்ளே கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக ஆக்சிஜன் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் காப்பாற்றப்பட்டனர்.