காணாமல் போன போலீஸ்காரர் சடலமாக கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்ரவாண்டி அருகில் ஏழாம் கிராமம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலம் பகுதியிலிருக்கும் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தேர்தல் பணிக்காக கடந்த 18 ஆம் தேதி விக்ரவாண்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி தமிழரசி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் வேல்முருகனை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் அவருடைய மனைவி இது குறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகனை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் இருந்து குத்தாம்பூட்டி செல்லும் வழியில் உபயோகத்தில் இல்லாத அரிசி ஆலை ஒன்று இருந்துள்ளது. இந்த அரிசி ஆலையின் அருகில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை பார்த்துள்ளனர். அப்போது இறந்து கிடந்தது மயிலம் பகுதியில் போலீஸ்காரராக பணியாற்றிவந்த வேல்முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு வேல்முருகனின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகன் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.