ஆம்புலன்ஸ் வைத்து பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சீராமணியூர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவு பாதுகாப்பு துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹரிப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஹரிப்பிரியாவிற்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹரிப்பிரியா ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஓமலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமார் வாகனத்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து அவசரகால மருத்துவ நுட்புனர் உமாராணி ஹரிப்ரியாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார், இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு தாயும், சேயும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய உமாராணி மற்றும் ஓட்டுநர் குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.