நீச்சல் பழகி கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலியில் இருக்கும் சட்ட கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நீச்சல் தெரியாத தர்மராஜ் தனது இடுப்பில் கயிறு கட்டி நீச்சல் பழகி கொண்டிருந்தார். அப்போது அவரது இடுப்பில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தர்மராஜ் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தர்மராஜின் சடலத்தை மீட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் தர்மராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.