சென்னை மாவட்டத்தில் உள்ள முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளி வேன் தாம்பரம் பகுதியில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் ஏழாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ரியோனா உள்பட 31 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் பள்ளி அருகே இருக்கும் சாலையில் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் அவசர வழி கதவு உடைந்து சாலையில் விழுந்தது.
இதனால் அந்த கதவுக்கு அருகே இருக்கையில் அமர்ந்திருந்த ரியோனா வேனில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். மேலும் சிறுமியின் நான்கு பற்களும் உடைந்து ரத்தம் கொட்டியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை பார்த்ததும் பள்ளி வேன் ஓட்டுநர் வெங்கட்ராமன் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார்.
அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் பள்ளி வாகனத்தை முறையாக பராமரிக்காமல் இயக்கியதே விபத்துக்கு காரணம் என பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலந்து போக செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.