வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்த கந்தசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு கிணறு ஒன்றை வெட்டியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கிணறு திடீரென்று உள்வாங்கியதால் விவசாய கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார் . இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது தோட்டத்தில் கிணறு வெட்டினேன். மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், ஊடுபயிர் சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது.
20 அடி சுற்றளவும், 22 அடி ஆழத்திலும் இந்த கிணற்றில் தண்ணீர் நன்றாக ஊறியதால் வயலுக்கு பாய்ச்சி விவசாயம் செய்தேன். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்த போது திடீரென்று கிணறு உள்வாங்கி பூமிக்குள் சென்றிருந்தது. இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. மண்ணும் சரிந்துவிட்டது. நேற்று இப்பகுதியில் மின்னல் தாக்கியதால் கிணறு உள்வாங்கியதா? அல்லது நில நடுக்கமா? என்பது தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.