காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சின்ன சூண்டி குரும்பர் பாடியில் புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிவாசி மக்கள் பயந்து போய் வீடுகளுக்குள் பதுங்கினர். இருப்பினும் காட்டு யானைகள் வீடுகளை சூழ்ந்து கொண்டு 4 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாகியது. இருப்பினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனையடுத்து காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பேரூராட்சி தலைவர் சித்ரா தேவி ஆகியோர் சேதப்படுத்திய வீடுகளை பார்வையிட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை சரிசெய்து தருமாறு பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோடைகாலம் என்பதால் காட்டு யானைகளின் வரவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.