திடீரென ஏற்பட்ட ரயில் என்ஜின் கோளாறால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்..
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் மூலம் நீராவி ரயில் இயக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் ரயில் நீராவி ரயில் இயக்கப்பட்டுள்ளது. நேற்று ஊட்டியிலிருந்து 150 பயணிகளுடன் புறப்பட்ட ரயில் மதியம் 3 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அதன்பிறகு அங்கிருந்து 3.15 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு அட்ர்லி கல்லார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ரெயில் என்ஜின் திடீரென கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7 மணிக்கு மாற்று ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு கல்லார் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதனையடுத்து கோளாறு ஏற்பட்ட ரயில் என்ஜின் கழற்றி விட்டு புதிய என்ஜினை ரயிலில் இணைத்து இயக்கினர். இந்த ரயில் இரவு 8.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்தது. இவ்வாறு என்ஜின் கோளாறால் 3 மணி நேரம் தாமதமாக ரயில் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.