கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இதில் 13 வது மாடியில் நேற்று மாலை 6 மணி அளவில் தீ ஏற்பட்டது. பின்னர் அந்த தீ மளமளவென பரவி பிற அடுக்குகளுக்கும் பரவியது. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களில் 4 பேர் லிஃப்டில் மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், அதையடுத்து மற்ற ஐந்து பேர்களும் தீயில் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த கட்டிடத்தில் இருந்த சிலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீ விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார். தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.