ஜப்பானில் நேற்று திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஜப்பானில் உள்ள வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மியாகி பிராந்தியத்தில் திடீரென்று நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறிய தகவலின் படி அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 புள்ளிகளாக பதிவாகி, பூமிக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 10.27 மணிக்கு ஏற்பட்டு அதன் பின் சில வினாடிகள் நீடித்துள்ளது. அப்போது அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் பயங்கரமாக அதிர்ந்துள்ளன. இதனால் அலறியடித்தபடி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல்கள் எதுவும் இல்லை.
அதேபோல் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இந்த நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்படவில்லை. அதேசமயம் மியாகி பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ரயில்வே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ஜப்பானின் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் நிலநடுக்கம் ஏற்படுவது அங்கு வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அதேபோல் ரிக்டர் அளவுகோளில் 9.0 புள்ளிகள் அளவில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பாதிப்பினால் மியாகி பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்டதோடு, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.