மண் சரிவு ஏற்பட்டதால் வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், பொன்னானி, நெலாகோட்டை, கரியசோலை, பிதிர்காடு, அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று உப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த் என்பவரின் வீட்டின் முன்பு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது வீட்டின் தடுப்புச்சுவர் மண்ணில் புதைந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறியதால் உயிர்சேதம் தடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அந்த வீடு இடியும் நிலையில் அந்தரத்தில் தொங்குகிறது. இதனை தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.