சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொழிலாளி மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் பெட்டி கடை அருகே நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சரவணன் அங்கு குடி போதையில் வந்துள்ளார். அப்போது குணசேகரனுக்கும், சரவணனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் குணசேகரனை, சரவணன் குடிபோதையில் அடிக்க முயற்சி செய்துள்ளார்.
அதனால் அவர் உடனே அங்கிருந்து ஓடினார். அவரை சரவணன் விரட்டி சென்று மண்வெட்டியை எடுத்து பலமாக தாக்கியுள்ளார். அதில் குணசேகரன் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அவரை தொடர்ந்து மண்வெட்டியால் சரவணன் தாக்கியுள்ளார். அதில் குணசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் குணசேகரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.