அமோனியா வாயு கசிந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியில் மீனவர்களுக்கு பயன்படும் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை சீனிவாசன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் படகுகளில் மீனவர்கள் மீன்களைப் பதப்படுத்தி வைக்கும் ஐஸ்கட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஐஸ்கட்டி தொழிற்சாலையில் உள்ள வாயு குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த குழாயிலிருந்து அமோனியா வாயு அதிக அளவில் கசிந்துள்ளது. இதன் காரணமாக காசிமேடு பகுதியில் உள்ள அண்ணாநகர் பகுதிக்கு அமோனியா வாயு வேகமாக பரவியுள்ளது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனே காசிமேடு காவல் நிலையத்திற்கும், ராயபுரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஐஸ்கட்டி தொழிற்சாலைக்கு சென்று வாயு கசிந்து கொண்டிருந்த குழாயை அடைத்துள்ளனர். அதன்பிறகு தொழிற்சாலையில் வேலை பார்த்த ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டு தற்காலிகமாக தொழிற்சாலையை பூட்டிவிட்டனர்.