அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலிருந்து ராஜபாளையத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விளக்கு பகுதிக்கு வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் அருகே இருந்த ஒரு மரத்தில் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்தை முனியசாமி என்பவர் ஓட்டி வந்தார். இப்பேருந்தில் மொத்தம் 43 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து மரத்தில் மோதியதால் ஓட்டுநர் உட்பட 10 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு முதலுதவி கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விருதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்து முறையாக பராமரிக்கப்படாததால்தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.