டிராக்டர் டிரெய்லர் கழன்று சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் புறவழிச் சாலையில் உள்ள தோப்பில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தோப்பில் இருந்த புளியம்பழங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு டிராக்டர் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை அபினேஷ் என்பவர் ஓட்டியுள்ளார்.
அப்போது கம்பம் பாவலர் படிப்பகம் அருகே உள்ள சேனை ஓடையில் சென்றபோது திடீரென டிராக்டரின் டிரெய்லர் கழன்று கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் டிரெய்லரில் இருந்த தொழிலாளர்கள் புளியம்பழ மூட்டைக்கு நடுவே சிக்கி உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அப்பகுதியின் உடனடியாக மூட்டைக்கு நடுவே சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர்.
ஆனால் மீனாட்சி புரத்தை சேர்ந்த தொழிலாளி பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஈஸ்வரன்(23), திலீப் (23), மணிகண்டன் (21), பாலமுருகன் (38), தங்கசெல்வம் (36), வெள்ளைச்சாமி (22), சிவா இளவரசு (34), அஜித்குமார் (22), சேகர் (60), பிரபாகரன்(33), ஹரீம் (25) ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.