ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள பாலூத்து பகுதியில் கோட்டைகருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அமுதா(46) சம்பவத்தன்று தங்கம்மாள்புறத்தில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தம்பி மகன் கபிலனுக்கு திடீரென வலிப்பு வந்ததால் அவரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் கடமலைக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மயிலாடும்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் அமுதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஆட்டோ டிரைவர் மகேஸ்வரன், கபிலன், முருகன் ஆகியோர் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.