ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய போலீசை பணியிடை நீக்கம் செய்ய சூப்பிரண்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாராய குற்ற வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த வாகனங்கள் காடம்பாடியிலுள்ள பழைய ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை அதிகாரியான செல்வகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வெளிப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிந்து ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் ஆயுதப்படை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியான முருகன் என்பவர் அங்கிருந்த இருசக்கர வாகனத்தை திருடி ராஜ்குமாரிடம் விற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் தலைமறைவான முருகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.