கிணற்றில் குதித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள பெரிய சோளிபாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சமீபத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்தொற்று குணமடைந்த பின்பும் செல்லத்துரை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள அம்மன்கோவில் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அருகே இருந்த பொது கிணற்றில் திடீரென குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் ஜோடர்பாளையம் காவல்துறையினர் கிணற்றில் இறங்கி செல்லத்துரையின் உடலை பிணமாக மீட்டனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் செல்லத்துரையின் உடலை உடற்கூறு ஆய்விற்கு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து செல்லத்துரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.