கடலில் நீர்மட்டம் குறைந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். இவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
இங்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும். இந்நிலையில் நேற்று கடல் சீற்றம் மற்றும் கடல் நீர்மட்டம் குறைந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் பொறுமையோடு காத்திருந்து படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மகிழ்ச்சியோடு சென்றனர்.