சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி சி.எல் காலனி பகுதியில் திருநாவுக்கரசு(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி திருநாவுக்கரசு அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்த திருநாவுக்கரசு நேற்று தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் கிடந்த திருநாவுக்கரசை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனை அடுத்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு திருநாவுக்கரசு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.