வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான இசக்கிமுத்து(34) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் காடுகளில் சுற்றித் திரியும் வன விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை இசக்கிமுத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்ததால் இசக்கிமுத்துவின் கைகள் சிதைந்து அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து குண்டு வெடித்த சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த இசக்கிமுத்துவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் வெடிகுண்டு தயாரித்து இடத்தை பார்வையிட்டு வெடிக்காமல் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.