மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது,
சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதையடுத்து அக்காவை பார்க்க டாக்டர் சிவக்குமார் இரவு போயஸ் தோட்டத்திற்கு சுமார் 9 மணி அளவில் வந்தார். அதன் பிறகு சுமார் 9.30 மணி அளவில் எப்போதும் போல அக்கா ஜெயலலிதா பல் துலக்க குளியல் அறைக்கு சென்றார். அங்கு அக்கா ஜெயலலிதா பல் துலக்கி மவுத்வாஸ் செய்த நிலையில், திடீரென சசிகலா இங்கே வா, எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறினார். உடனே நான் அக்காவை அழைத்து அருகில் உள்ள கட்டிலில் அமர வைத்தேன்.
அப்போது திடீரென்று அக்கா மயங்கிய நிலையில் என் தோளில் சாய்ந்து விட்டார். இதற்கிடையில் டாக்டர் சிவக்குமார் தேவையான முதலுதவி மருத்துவ சிகிச்சைகளை அக்காவுக்கு அளித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் அக்காவை ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு மருத்துவர்கள் அக்காவை ஸ்டிரெச்சரில் இருந்து இறக்கி உடனே அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அங்கு பல சிறப்பு மருத்துவர்கள் வந்து அக்காவுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் அக்கா மயக்கம் தெளிந்து சகஜ நிலைக்கு திரும்பினார் என குறிப்பிட்டுள்ளார்.