நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா(47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி அதிகாலையில் அவர் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது திடீரென சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. அப்போது கடை ஊழியர்கள், டீ குடிக்க வந்தவர்கள், பக்கத்து கடைக்காரர், டீக்கடை அருகில் உள்ள சாலையோர நின்றவர்கள் என ஏராளமானோர் மீது தீப்பற்றியதில் காயம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மூசா, சேகர், பிரவீன், சுசீலா(50), தக்கலை சசிதரன்(63), முத்தலக்குறிச்சி சுதா(43), நெய்ய்பூர் பக்ருதீன்(35), அருகுவினை சுப்பையா(66) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ள அரசு மருத்துவக் கல்லூரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி தக்கலை சேர்ந்த சசிதரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தீ விபத்து நடந்த டீக்கடை அருகில் டயர் கடை நடத்தி வந்தவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.