சிறுவன் தாலி கட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது வயது சிறுமி 8-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி காதலை ஏற்காமல் சிறுவனிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார். இந்நிலையில் சிறுமி அவரது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற சிறுவன் திடீரென சிறுமியின் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.