கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாச மாவட்டம் கோமராலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 36 கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தவாடா என்னும் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியுள்ளது. இதனைப் பார்த்து லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லாரியிலிருந்து தப்பி ஓடி உள்ளனர். சிறிது நேரத்தில் லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர்களுக்கு தீப்பறவியுள்ளது. இந்த நிலையில் கண்ணிமைக்கும் நொடியில் கேஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் விண்ணை முட்டும் அளவிற்கு தீ பிழம்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டுனர்கள் இதனை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.
மேலும் இது பற்றி உடனடியாக உழவு பாடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு துறையினரால் லாரியின் அருகே நெருங்க முடியாமல் தவித்து வந்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் வெடித்து சிதறிய கியாஸ் சிலிண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தது. இதனை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையின தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த கேஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.