நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்த 8 ஆயிரத்து 300 டன் நெல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நெல் மூட்டைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க அலுமினிய பாஸ்பேட் ரசாயனம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் நேற்று முன்தினமும் மழை பெய்துள்ளது. அப்போது மலை சாரல் குடோனுக்குள் விழுந்ததால் வைக்கப்பட்ட அலுமினியம் பாஸ்பேட் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்புத துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த காலி சாக்குகள், தார்பாய்கள் போன்றவை முற்றிலுமாக எரிந்துள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது. குடோனில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக மாத்திரைகள் வடிவில் அலுமினியம் பாஸ்பேட் என்ற ரசாயனம் மருந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் பெய்த மழையால் இந்த அலுமினியம் பாஸ்பேட் திடீரென தீப்பிடிக்க எரிந்தது. இந்நிலையில் நெல் மூட்டைகள் பெரிதாக சேதம் அடையவில்லை. இருந்தாலும் ஒரு சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அதனை வேறு சாக்குகளில் மாற்றி வருகிறோம். மேலும் எவ்வளவு கிலோ நெல் சேதமடைந்துள்ளது என கணக்கிடப்பட்டு வருகிறோம் என அவர் கூறியுள்ளனர்.