நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிட்டங்கின் அருகே நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி கிட்டங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் லாரி ஒன்று ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றுவதற்காக கிடங்கின் அருகே நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக உத்தமபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் லாரி முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து லாரி டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.