காட்டு யானை விரட்டியதால் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் சுற்றி திரிகிறது. இந்த யானைகள் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் பழைய ஆயக்குடியில் வசிக்கும் வள்ளிநாயகம்(45), முனியம்மாள்(60) உள்பட ஐந்து பெண்கள் பொன்னிமலை கரடு பகுதியில் மக்காச்சோள அறுவடை பணிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென காட்டு யானை வந்ததால் அவர்கள் அபய குரல் எழுப்பியவாறு தப்பியோட முயன்றனர்.
அவர்களை யானை துரத்தியது. இதில் தப்பி ஓடும்போது முனியம்மாளும், வள்ளிநாயகமும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டியடித்து 2 பேரையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.