மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளி வீட்டில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி சோலை சொக்கலிங்கம் நகர் 4-வது தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் வீட்டின் குளியலறையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டர் உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ளது.