தெருநாய் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது திடீரென அங்கு வந்த தெரு நாய் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்க ஆரம்பித்தது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் அங்குமிங்கும் தப்பி ஓடினர். ஆனாலும் அந்த தெரு நாய் ஜின்னா நகர், அருந்ததியர் தெரு, ஊரணி, வீரப்ப சாமி கோவில் தெரு என ஒவ்வொரு வீதியாக சென்று ஏராளமானோரை கடித்து குதறியது.
இதில் ராமகிருஷ்ணன்(59), செம்பியம்மாள்(80) உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க நகரசபை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.