காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் லக்கச்சந்திரம், மரக்கட்டா, நொகனூர் மரக்கட்டா உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கொத்தூர் கிராமத்திற்குள் நுழைவதை பார்த்து அதிர்ச்சிமடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அந்த யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.