மோட்டார் சைக்கிள் காட்டு பன்றியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராம்குமார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் பவானிசாகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய ஒரு காட்டுப்பன்றி சாலையை கடந்து சென்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக ராம்குமாரின் மோட்டார் சைக்கிள் காட்டுப்பன்றியின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராம்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.