அரியானா மாநிலம் பிவானி பகுதியில் தோஷம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாதம் கிராமம் கல்குவாரி நிறைந்த பகுதி ஆகும். இங்கு இன்று காலை சுரங்கப் பணியின் போது மலையின் பெரும்பகுதி திடீரென்று விரிசல் ஏற்பட்டு சரிந்து விழுந்தது. இதனால் அங்கு நின்றிருந்த சுமார் அரை டஜன் பாப்லாண்ட் இயந்திரங்கள் மற்றும் டம்ப்பர்கள் இடிபாடுகளில் புதைந்தது. மேலும் இங்கு வேலை பார்த்த பல தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஒருவர் உயிரிழந்ததாகவும், 12 முதல் 20 பேர் வரை புதைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அம்மாவட்ட நிர்வாகம் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அரியானா முதல்வரான மனோகர் லால் கட்டார், பிவானியின் தாதம் சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தால் நான் வருத்தமடைகிறேன் என்று கூறினார். மேலும் மீட்புப் பணியை விரைவுபடுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவி வழங்கவும் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.