திடீரென போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்ட லாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து 2 லாரிகள் தூத்துக்குடிக்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதிக்கு வந்தபோது திடீரென போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது. அப்போது லாரியில் இருந்து பயங்கர துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் பாய்ந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 2 லாரிகளையும் சிறைப் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லாரிகளில் மேற்கொண்ட சோதனையின் போது மீன் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.